வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

பெரியார் குடும்பக் கட்டுப்பாடு பற்றி

தந்தைப் பெரியார் ஒருமுறை, திண்டுக்கல் கூட்டத்தில் பேசும்போது, மேடையில் பேசத்தொடங்கு முன் குழந்தைகளைக் கொடுத்தால் இரண்டுரூபாய் அல்லது ஐந்துரூபாய் வாங்கிக்கொண்டு பெயர் வைப்பார். அன்று அப்படிக்கொண்டு வந்து கொடுத்த நண்பரின் குழந்தையை ஒரு சில நிமிடம் பார்த்துவிட்டு “சித்தார்த்தன் என்று பெயர் சூட்டுகிறேன்” என்றார் பெரியார். குழந்தையின் தந்தை பதற்றத்துடன் “அய்யா!.. அய்யா! இதற்கு முன்னர் பிறந்த என்பையனுக்கும் அதே பேர்தான் வச்சீங்க..இதற்கும் அதே பெயரா…” என்றார். “அப்படியா! என்ற பெரியார், அவரை உற்றுப்பார்த்தார். இஃது எத்தனாவது குழந்தை..” என்றார். தோழர் கூச்சத்தோடு நெளிந்துகொண்டே ‘இது நான்காவது’ என்றார். (குடும்பக்கட்டுப்பாடு என்ற கருத்துக்குத் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கருத்தாவே பெரியார்தான். குடும்பக் கட்டுப்பாட்டை நாற்பத்து ஐந்து ஆண்டுகள் முன்னரே தொடங்கி இதை வலியுறுத்துபவர்) பெரியாருக்குக் கோபம் வந்துவிட்டது. “போ..போ.. உனக்கெதுக்குக் கறுப்புச் சட்டை” என்று குழந்தையைத் திரும்பக் கொடுத்துவிட்டார். எல்லோரும் சமாதானம் செய்த பின்னர்ப் “பத்து ரூபாய் கொடு, உனக்கு இது அபராதம்” என்று சொல்லிப் பின்னர்க் காமராஜ் என்று பெயர் வைத்தார். இன்று தமிழ்நாட்டிலுள்ள பல காமராஜ்கள் பெரியாரால் பெயர் சூட்டப்பட்டவர்களே! (திருச்சி செல்வேந்திரன் பதிவுகளில் இருந்து)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக